தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Music School: மியூசிக் ஸ்கூல் படத்தின் கதை என்ன? - மனம் திறந்த ஸ்ரேயா! - இயக்குனர் பாப்பாராவ் பிய்யாலா

நடிகை ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள 'மியூசிக் ஸ்கூல்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை ஸ்ரேயா, இப்படம் குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தம் பற்றி பேசுவதாக தெரிவித்தார்.

Music
நடிகை

By

Published : May 5, 2023, 2:17 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினிகாந்த் உள்பட தமிழின் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கோஷீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். மியூசிக் ஸ்கூல் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ஸ்ரேயா.

பாப்பாராவ் பிய்யாலா இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். ஷர்மன் ஜோஷி, ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், மியூசிக் ஸ்கூல் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று(மே.4) நடைபெற்றது. நடிகை ஸ்ரேயா சரண், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை லீலா சாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகை ஸ்ரேயா, "சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷுட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல்தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டு வந்துள்ளார். குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை பற்றி இப்படம் பேசுகிறது. தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் இதுபோன்ற அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றிய படம். தனித்திறமைகள் பற்றியதல்ல.

இளையராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறொரு உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும். ஷர்மன் ஜோஷி நடிப்பை மும்பையில் வேறொரு ஷுட்டிங்கில் பார்த்துள்ளேன். அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். நான் நிறைய புதுமுக இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளேன். இது நிறைய கற்றுக் கொள்ள உதவுகிறது. எனக்கு குழந்தைகள் பிடிக்கும். இதில் நடித்த குழந்தைகள் அனைவரும் திறமையானவர்கள். இப்படத்தில் அனைவரும் மிகக்கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. எல்லோரும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள்" என்று தெரிவித்தார்.

இயக்குனர் பாப்பாராவ் பிய்யாலா பேசும்போது, "இந்த காலத்தில் மாணவர்கள் எப்போதும் தேர்வு எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. நானெல்லாம் படிப்பு முடிந்து விளையாட்டில் தான் அதிகம் ஈடுபட்டுள்ளேன். குழந்தைக் காலத்தில் மிகச் சந்தோஷமாகவே இருந்துள்ளேன். இந்தப் படத்தில் சொல்லும் விஷயம் மிகத்தீவிரமானவை. இக்காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் பற்றிப் பேசும்போது அதை மியூசிக்கலாக பேசலாம் எனத் தோன்றியது.

ஸ்ரேயா சரண் மியூசிக் டீச்சர், ஷர்மன் ஜோஷி டான்ஸ் மாஸ்டராக போடலாம் என முடிவெடுத்த பிறகு நான் நியூயார்க் சென்று மியூசிக் பற்றி ஆராய்ச்சி செய்தேன். இந்தப் படத்தில் மியூசிக் எனும் போது இளையராஜா ஞாபகம் மட்டுமே வந்தது. என் நண்பர் அவரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் போவதற்கு முன் இசை பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தது. ஆனால் அவர் ‘வா’ நாம் செய்யலாம் என்றார். அதன் பிறகு எல்லாமே மேஜிக்தான். அவர் இசை இப்படத்தில் உங்களை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும். ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் என எல்லோருமே மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள். மிக அட்டகாசமான நடிப்பைத் தந்துள்ளார்கள். குழந்தை நட்சத்திரங்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். இந்தப்படம் உங்கள் மனதைப் பாதிக்கும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 படத்தின் பூஜை!

ABOUT THE AUTHOR

...view details