சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஜெயம் ரவி தற்போது ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன், ஜீனி, ராஜேஷ் இயக்கத்தில் பிரதமர் என பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். சைரன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியானது. தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு ’காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தலைப்பு பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கிளாசிக் திரைப்படத்தின் தலைப்பு ஆகும். இப்படத்தில் நித்யா மேனன் - ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.