சென்னை:இதுகுறித்து குரங்கு பெடல் திரைப்படத்தின் படக்குழுவினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
'எங்களது இரண்டாவது திரைப்படமான குரங்கு பெடல் திரைப்படம் இந்த ஆண்டு கோவாவில் நடக்கவிருக்கும் நவம்பர் 20 முதல் 28 வரை நடக்கும் இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவினால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். மதுபானக்கடை, வட்டம் திரைப்படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
மாண்டேஜ் பிக்சர்ஸ் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன், இணைத்தயாரிப்பு எஸ்.ஆர்.ஜெ. புரொடக்ஷன்ஸ் சஞ்சய் ஜெயக்குமார் மற்றும் கத கேளு என்டர்டெயினர் உடன் இனைந்து தயாரித்துள்ளோம். இந்தப் படம் ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு, பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் திரைக்கதையினை அமைத்திருக்கிறார்கள்.
1980-களின் கோடை காலத்தில் சேலம் (தற்போது நாமக்கல் மாவட்டம்) மற்றும் ஈரோடு மாவட்டங்களின் காவேரிக்கரையோரப் பகுதிகளை களமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான இதில் குழந்தைகளுடன் காளி வெங்கட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உயிரோட்டமான பாடல்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையின் மூலம் மக்களைக் கவர்ந்த ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை, மற்றும் பாடல்கள் இப்படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கிறது.