சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. திங்கள் முதல் பெய்த கனமழையால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் 6 அடிகளுக்கு மேல் தண்ணீர் புகுந்தது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்புப் படையினர் படகு மூலம் மீட்டு வருகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகமான மழைப்பொழிவையும் சேதத்தையும் இந்த பருவமழை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துள்ள பொதுமக்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தண்ணீர் வடியாததால் நாளை சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தன்னார்வலர்கள் மற்றும் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்த மழை வெள்ளத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் சில தினங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது பங்காக ஒரு லட்ச ரூபாயை முதலமைச்சரின் பேரிடர் கால நிவாரண நிதி திட்டத்திற்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் சினிஷ் இருவரும் இணைந்து தங்கள் பங்கிற்கு ரூ.2 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளனர்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ஆகியோர் நடித்த பார்க்கிங் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மழையால் திரையரங்குகளில் காட்சி ரத்து செய்யப்பட்டதால் படத்தின் வசூல் பாதித்துள்ள நிலையிலும் படக்குழு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அலட்சியம், பேராசை - தமிழக அரசை கடுமையாக சாடிய சந்தோஷ் நாராயணன்!