சென்னை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். இந்தாண்டு தொடக்கத்திலே ஏராளமான படங்களைத் தன்வசப்படுத்தியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ஜவான் படத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் மற்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகப் பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் இணைந்துள்ளார். இந்தப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜன.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படக்குழு தற்போது இப்படத்தின் ப்ரோமஷன் வேலைகளில் இறங்கியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று(ஜன.7) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகை கத்ரீனா கைஃப், "சென்னை எனக்கு இரண்டாவது வீடு மாதிரி. எனது முதல் தமிழ்ப் படம் மெரி கிறிஸ்துமஸ். நான் தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்திருக்கிறேன். இந்தப்படம் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்படம் எதிர்பாராத விதமாக எனக்கு அமைந்தது. நான் விஜய் சேதுபதியின் 96 உள்ளிட்ட படங்களைப் பார்த்திருக்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "நான் படப்பிடிப்பு முடிந்த பிறகு தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டேன். மிகவும் கஷ்டமாக இருந்தது" என்று தமிழில் பேசினார்.
பின்னர், இயக்குநர் ஸ்ரீ ராம் பேசுகையில், "விஜய் சேதுபதியுடன் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் நன்றாக நடித்துக் கொடுத்தார். 96 படத்தைப் பார்த்துவிட்டு இவரை நடிக்க வைக்க எனது குழுவிடம் கேட்டேன். அவர்களும் வித்தியாசமான காம்போவாக இருக்கும் என்று இப்படத்திற்கு ஆர்வம் காட்டினர். எங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு பிரமாதமாக நடித்துள்ளார்" என்று பேசினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சண்முகராஜன், "முதலில் தியாகராஜா குமாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகராஜா குமார ராஜா தான் என்னை இயக்குநர் ஸ்ரீராமுக்கு அறிமுகப்படுத்தினார். எந்தப் படம் நடித்தாலும் படத்தில் நடிக்கும் கலைஞர்களுடன் ஒரு நட்புறவு கொள்ள வேண்டும் என நினைப்பேன். இந்தப்படத்தில் சிலர் எனக்கு முன்னதாக அறிமுகமாகியிருந்தாலும் சிலர் பழக்கம் இல்லாதவர்களாகவே இருந்தனர். நடிகர் விஜய் சேதுபதி, ராதிகா சரத்குமார் ஆகியோருடன் எனக்கு முன்னதாகவே கூத்துப்பட்டறையில் வேளைப்பார்த்த அனுபவம் இருந்தது.