ஹைதராபாத்:டி சீரியஸ் மற்றும் சினீ1 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள படம் 'animal'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா முன்னதாக தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவர் தெலுங்கில் பரத் அன நேனு, ஆச்சார்யா ஆகிய படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்து பிரபலமடைந்தவர். இந்த படத்தின் முதல் போஸ்டர் கடந்த ஜனவரி மாதமே வெளியானது. முதலில் 'animal' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி டிசம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ரன்பீர் கபூரின் கதாபாத்திர பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. கீதாஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் 'animal' படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா போஸ்டரில் கலைந்த தலைமுடியுடன் மெரூன் நிற புடவையில் காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அப்பாவிற்கும் மகனுக்கும் உள்ள மோதல் போக்கை மையமாக கொண்ட கதையில் பல்பீர் சிங் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூரின் கதாபாத்திர போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ரன்பீர் கபூர் பிறந்தநாளன்று animal படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. animal திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க:வசூல் வேட்டையில் பதானை ஓரங்கட்டிய ஜவான்... ரூ.1000 கோடியை நெருங்க இன்னும் இவ்வளவு தான் பாக்கி!