சென்னை: பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைத்துறை பயணத்தின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில், நேரலை இசை நிகழ்ச்சி (Live In Concert) செப்.10ஆம் தேதி மாலை 7 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு, பிளாட்டினம், என்று பல்வேறு படிநிலை விலையில் பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் அரங்கினுள் கூட்டம் அலை மோதியதாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் வைத்திருந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த கூட்டத்தில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும் கூறுகின்றனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த இடமே போராட்டக் களமாக காட்சியளித்தது. தற்போது இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், இது தொடர்பாக பல்வேறு பிரபலங்கள் ஏஆர் ரகுமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவது மிகப் பெரிய வேலை. இது போன்ற பெரிய இசை நிகழ்ச்சி நடத்தும் போது கூட்ட நெரிசல், போக்குவரத்து பிரச்சனை உள்ளிட்டவற்றை கையாள்வதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும். நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும் சில விஷயங்கள் தவறாகி விடுகின்றன. இது ரசிகர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது.
ஒரு சக இசையமைப்பாளராக இந்த சூழலில் துரதிர்ஷ்டவசமான நிலையில் ஏ.ஆர்.ரகுமானுடன் துணை நிற்கிறேன். குறிப்பாக இந்த இசை நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத இரவை கொடுக்கும் நோக்கில் நடத்தப்பட்டது. இதன் மூலம் பாடம் கற்கப்பட்டு எதிர்காலத்தில் இசை நிகழ்ச்சிகள் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பாகவும் கவனமுடன் நடப்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்வார்கள்” என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி மேலும் நடிகர் கார்த்தி, ”மூன்று தசாப்தங்களாக ஏ.ஆர்.ரகுமான் மீது அனைவரும் அன்பு வைத்துள்ளோம். இசை நிகழ்ச்சி அன்று நடந்த விஷயங்கள் எதிர்பாராதது. அந்த இசை நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இது அவருக்கு தெரிந்ததும் மிகவும் பாதிக்கப்பட்டார். நான் ரகுமான் உடன் நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பூ “ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து கேள்விபட்டேன். எனது மகளும் அவரது நண்பர்களும் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். அவர்களிடம் டைமண்ட் விலை டிக்கெட் இருந்தும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானை குறை கூறுவது தவறு. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இதற்கு முழு பொறுப்பு. இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் துணை நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி மேலும் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா ரகுமான், இந்த விவகாரத்தில் அவருக்கு துணை நிற்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதல்வரின் கான்வாயும் சிக்கியது. இதனால் பள்ளிக்கரணை பகுதி காவல் துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறியது என்ன? பதில் கூற மறுத்த காவல் ஆணையர்?