நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வந்தது. அதனைத் தற்போது இருவருமே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து மஞ்சிமா மோகன் தனது சமூக வலைதள இன்ஸ்டா பக்கத்தில், "மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்துபோன போது நீ ஒரு காவலனாய் என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்.
நீ எப்போதும் எல்லாவற்றிலும் என்னுடைய ஃபேவரைட்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கவுதம் கார்த்திக், "சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்? பெரும்பாலானவர்கள் சொல்வார்கள், நீங்கள் அவர்கள் மீது உங்கள் கண்களை வைத்த நொடியில் நீங்கள் அன்பினால் நிறைந்திருப்பீர்கள், உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் நீங்கள் உணர்வீர்கள் என்று.
அது இப்போது என் வாழ்வில் நடந்திருக்கிறது. மஞ்சிமா மோகன், நீ நமக்குள் ஏற்படுத்திய உறவை விவரிக்க 'காதல்' என்ற வார்த்தை கூட போதுமானதாக இருக்காது. ஐ லவ் யூ" என்று சொல்லியுள்ளார். மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், தமிழில் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து 'தேவராட்டம்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’நித்தம் ஒரு வானம் படப்பிடிப்பின் போது அதிசயங்கள் நிகழ்ந்தது’ - நெகிழ்ந்த அசோக் செல்வன்