சென்னை:இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் மாமன்னன். இப்படத்தில் வடிவேலு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மாரி செல்வராஜின் முந்தைய படங்களை போலவே இப்படமும் அழுத்தமான கதையை பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டியுள்ளனர். இதனால் இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் மாமன்னன் திரைப்படம் வெளியாகி உள்ளது.
மேலும், டிக்கெட் முன்பதிவும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியானதை ஒட்டி சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதயநிதி ரசிகர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் படத்தை கொண்டாடி வருகின்றனர். திருநெல்வேலியில் தனியார் திரையரங்கில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து மாமன்னன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
காலை முதலே திரையரங்குகள் முன்பு குவிந்து உதயநிதி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம், மேளம் அடித்து உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும், வடிவேலுவின் நடிப்பு பிரமாதம் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் நடிப்பும், ஏஆர் ரகுமான் பின்னணி இசையும் அற்புதமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.