சென்னை: 'மாமனிதன்'படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சிவகுமார் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது குறிப்பில், 'துப்பாக்கி சத்தம், பன்ச் டயலாக், காதை பிளக்கும் பின்னணி இசை, அடிதடி ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சிற்றூர்களில் சராசரி மனிதர்களுக்கு இடையில் உலா வந்த ஒரு அறியப்படாத மனிதனின் கதையை யதார்த்தமான காட்சிகளைக் கொண்டு திரைப்படமாக வடித்துள்ளார், இயக்குநர் சீனு ராமசாமி.
ஒரு ஏமாற்றுபவன்; அவனிடம் ஏமாந்த ஒருவன்; இவர்களுக்கு இடையிலான போராட்டத்தில் உண்மையில் அவதிக்குள்ளாவது அவர்களின் குடும்பங்கள்தான் என்பதைக் காட்டியுள்ளார். தன் மகனிடம் ஏமாந்தவனிடம் தனது தங்க நகைகளை ஈடாக அளிக்கும் நியாய உணர்வு கொண்ட தாய், ஊரைவிட்டு ஓடிவிட்டவனின் குடும்பத்தைத் தனதாக ஏற்றுக் காப்பாற்றும் கருணை உள்ளம் கொண்ட நண்பன், இதுபோல மனதை நெருடும் கதாபாத்திரங்கள் உண்டு.
அதனையடுத்து பண்ணைபுரம் கிராமத்து அழகு, அங்கிருந்து கேரளத்து புழை கரையோர அழகு, மேலும் அங்கிருந்து காசி நகரம் காவி உடைகளின் ஓங்காரம் என்று மூன்று பகுதிகளாக கதை நகர்ந்து செல்கிறது. இசைஞானியைக் கொண்டு கங்கா ஆர்த்தி பாடல் ஒன்றை கொடுத்திருக்கலாம்.
காசியை அதன் தெய்வீகத்தோடு அணுகிய விதம் அங்கு நல்லிணக்க உணர்வை வளர்க்கும் விதத்தில் இஸ்லாமிய கதாபாத்திரத்தின் சித்தரிப்பு மனதில் இடம் பிடிக்கும் காட்சிகள் அற்புதம்.