விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாமனிதன்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் சீனுராமசாமி, காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது மேடையில் பேசிய ஆர்.கே.சுரேஷ், 'வாழ்வியல் சார்ந்து திரைப்படங்கள் எடுக்க சில இயக்குநர்கள் தான் உள்ளனர். அதில் சீனு ராமசாமி முக்கியமானவர். படத்தைப் பார்க்கும்போது இது என்னுடைய குடும்பத்தில் நடந்தது போல இருந்தது. குடும்பத்தலைவனாக இருக்கும் அனைவரும் சந்திக்கும் பிரச்சினையாக இந்த படம் இருக்கும்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ரூ.19 கோடி ஷேர் வந்துள்ளது. ’விக்ரம்’ திரைப்படம் கேரளாவில் நல்ல வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் விஜய் சேதுபதி நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி வளர்ச்சியை பார்த்து பிரமிப்பாக இருந்தது. 'மாமனிதன்' படத்தில் விஜய் சேதுபதியை என்னுடைய தந்தையைப் பார்ப்பது போல உள்ளது. அவரது நடிப்பு, என்னுடைய அப்பாவைப் பார்ப்பது போல உள்ளது.
90 விழுக்காடு இந்தப் படத்தை வாங்கிவிட்டனர். இந்த மாதிரி தமிழ்ப்படங்கள் வருவது அரிது. இந்தப்படம் ஜூன் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படத்திற்கு எந்த அளவிற்கு விளம்பரம் தேவை என்பதை கமல் சார் சொல்லிக் கொடுத்துள்ளார்” எனப் பேசினார்.
நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், '' 'மாமனிதன்' படத்தில் நடித்தால் தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைப்பதாக யுவன்சங்கர் ராஜா தெரிவித்தார். அது எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய குரு சீனு ராமசாமி இந்த படத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். தன்னலம் பார்க்காத தகப்பன், தாய், நண்பனைப் பற்றிய கதைதான் 'மாமனிதன்’. சீனுராமசாமியின் வசனங்கள் மிகவும் எளிமையாக இருக்கும்.
சீனுராமசாமி போல் கிராமியக் கதையைப் பதிவு செய்ய யாரும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் தெளிவாக எடுப்பவர், இயக்குநர் சீனுராமசாமி. சீனுராமசாமியோடு தொடர்ந்து பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி. 55 நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து 37 நாட்களில் எடுத்து முடித்தோம்.
இன்னொருத்தர் எழுதிய வசனத்தை தன்னுடைய வசனம் போல் பேசவேண்டும் என நடிகர் குரு சோமசுந்தரம் எனக்கு கற்றுக்கொடுத்தார். ஆனால், அப்போது எனக்கு அது புரியவில்லை. மாமனிதன் நெகிழ்ச்சியான படம்' எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, ’ராதாகிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி சிவாஜி கணேசனின் பெயரில் பாதி பெயரை வாங்க வேண்டும் என்று சிவாஜி வீட்டு வாசலில் உள்ள விநாயகர் கோயிலில் நின்று வேண்டிக் கொண்டேன்’.
(அப்போது மேடையில் பேசிய சீனு ராமசாமி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்)
யுவன் சங்கர் ராஜா, இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இந்தப் படத்தில் இசையமைப்பதாக முதலில் சொன்னார்கள். ஆனால், கார்த்திக் ராஜா இசையமைக்கவில்லை. இது அவர்கள் எடுத்த முடிவு. ’மாமனிதன்’ படத்தில் விஜய்சேதுபதியை உலகமே திரும்பிப் பார்க்கும். விஜய் சேதுபதி தான் ’மாமனிதன்’ படத்தை இயக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததார்.