மலையாளத்தில் 'லால் பகதூர் ஷாஸ்திரி', 'வரி குழியிலே கொலபாதகம்', 'இன்னு முதல்' என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்த ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் ரெஜிஷ் மிதிலா கூறுகையில், "எனக்கு தமிழ்ப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் ’எனது’ படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையைக் கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார். அதுதான் 'யானை முகத்தான்'.
பேண்டஸி படமான இதில், ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயகரின் தீவிர பக்தர். எங்கே கணபதியை பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார். ஆனால் கொஞ்சம் பிராடு. அப்படியிருக்கும் ரமேஷ் திலக்கிடம், விநாயகம் என்று சொல்லிக்கொண்டு யோகி பாபு அறிமுகமாகிறார்.
ஒரு கடவுளை நாம் வேண்டிக்கொள்ளும்போது, நமது கஷ்டங்களை தீர்க்கச்சொல்லி மன்றாடும் போது, அவரே நேரில் வருவார் என நாம் எதிர்பார்க்க மாட்டோம். அப்படி அவர் வந்து விட்டால், நான் தான் கடவுள் என்று அவர் நிரூபிக்க போராட வேண்டியிருக்கும்.
அதேபோல் ரமேஷ் திலக் வாழ்க்கையில் யோகி பாபு வந்ததால் என்ன விநோத நிகழ்வுகள் நடக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கிற திருப்பம் என்ன என்பதே இப்படம்.
கதை சொன்னதுமே பிடிச்சுப் போய் தேதிகளை கொடுத்து ரெடியாகிட்டார், யோகி பாபு. அவரே, கருணாகரன், ஊர்வசின்னு கூப்பிட்டு நடிக்கச்சொல்லிட்டார். இதனால் எனக்கு முக்கிய கேரக்டர்களுக்கான பாதி வேலை குறைஞ்சு போச்சு.