ஹைதராபாத்: மலையாளத் திரையுலகில், 2003ஆம் ஆண்டு அறிமுகமானவர், பிருத்விராஜ் சுகுமாரன். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியதன் மூலம் மல்லுவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வந்தன. வில்லன், கதாநாயகன் என மாறி மாறி பல கதாபாத்திரங்களில் நடித்து, பலதரப்பு ரசிகர்களையும், தன்பக்கம் ஈர்த்தார். கோலிவுட்டில், கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமான கனா கண்டேன் படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பாரிஜாதம், சத்தம் போடாதே, மொழி, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் எனப் பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்து இருந்த போதிலும், ராவணன் படத்தில், ஐஸ்வர்யா ராயின் கணவராகவும், ஒரு காவல் துறை அதிகாரியாகவும் நடிப்பில் மிரட்டியிருந்தார்.
இயக்குநர் அவதாரம்: நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிக்கொடியை பிருத்விராஜ் நாட்டி உள்ளார். 2019ஆம் ஆண்டில், மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய லூசிஃபர் படம், 2022ஆம் ஆண்டு மோகன்லாலை மீண்டும் இயக்கிய ப்ரோ டாடி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் படங்களாக அமைந்தன. அதிலும் ப்ரோ டாடி படம் மிகச்சிறந்த காமெடி படமாகவும் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிருத்விராஜ், தற்போது சலார், விளையாத் புத்தா, ஆடு ஜீவிதம் உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
பிருத்விராஜ், பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் தற்போது விளையாத் புத்தா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது மறைந்த மலையாள இயக்குநர் சாச்சியின் கனவு திரைப்படமாகும். ஏற்கனவே சாச்சி இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்திருந்த பிருத்விராஜ், தற்போது அவரின் கனவு திரைப்படமான விளையாத் புத்தா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.