டெல்லி: கேரள தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் மோகன்லாலின் த்ரிஷ்யம் 3ஆம் பாகம் குறித்த படம் எடுப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளார். த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் அறிவித்த உடனேயே, சமூக வலைதளங்களில் மோகன்லால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இது குறித்து ஆண்டனி பேசும் வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றி, 'ஜார்ஜ் குட்டி இஸ் பேக்’ என்ற ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு த்ரிஷ்யம் திரைப்படம் வெளியானது. இதில் மோகன்லால், மீனா துரைராஜ் மற்றும் அன்சிபா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்ற த்ரிஷ்யம், தமிழ், ஹிந்தி என ரீமேக் செய்யப்பட்டது. த்ரிஷ்யத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு த்ரிஷ்யம் 2; தி ரீசம்ப்ஷன் 2021-இல் Amazon Prime வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது. இது பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.