சென்னை: சிபி சத்யராஜ் நடித்த டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸின் 'மாயோன்' கடந்தாண்டு உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. இது திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இதன் தனித்துவமான உள்ளடக்கத்தை பாராட்டினர். புராண இதிகாச திரில்லர் படைப்பு என பாராட்டப்பட்ட இப்படம், அனைத்து எல்லைகளையும் கடந்து பார்வையாளர்களின் இதயத்தை வென்றது.
புதுமையான விளம்பர உத்திகளின் மூலம் தொடக்கத்திலிருந்தே திரையரங்கத்தில் பார்வையாளர்கள் குவிந்தனர். இப்படத்தைக் கண்டு அவர்கள் முழு மனதுடன் கொண்டாடினர். 'மாயோன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு ஆண்டை கடந்த பிறகும் ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் குறையாமல் வைத்திருக்கிறது. கனடாவில் நடைபெற்ற 47வது டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராண திரைப்பட விருதை வென்று, சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஓடிடியில் இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது இந்த எதிர்பார்ப்பு முடிவிற்கு வந்திருக்கிறது. ஏனெனில் இந்த திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அட்டகாசமான கதைக்களம், கவனம் ஈர்க்கும் திரைக்கதை, நட்சத்திர நடிகர்களின் அற்புதமான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் ஒப்பற்ற இசை என பல விசயங்கள் 'மாயோன்' படம் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.