சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. வித்தியாசமான கதை சொல்லல் மூலம் பலரால் கவனிக்கத்தக்க படமாக மாறியது. இப்படத்தின் வெற்றி அவருக்கு தனது அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பை வழங்கியது.
அந்த படம் தான் ‘கர்ணன்’. இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கரோனா காலகட்டத்தில் வெளியாகியதாலும், ஊரடங்கு போடப்பட்டதாலும் படத்தின் வசூல் பாதித்தது. இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இப்படம் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வடிவேலுவின் லுக் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்த படத்தை ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்படத்தில் வடிவேலு ஒரு பாடல் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகளை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடலாசிரியர் யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை வடிவேலு பாடி உள்ளார்.