சென்னை:95வது அகாடமி விருதுகள் இன்று (மார்ச்.13) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்திய திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்'(RRR) படத்தின் 'நாட்டு நாட்டு' (Naatu Naatu) பாடலுக்கு 'சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது' வழங்கப்பட்டது.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்திற்குக் கீரவாணி இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இந்த பாடல் 'சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது' (Best Original Song Oscar Award) பெற்று சாதனை படைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
ஒரு இந்தியப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது குறித்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பாடலாசிரியரும் நாட்டு நாட்டு பாடலுக்கு தமிழ் வரிகள் எழுதியவருமான மதன் கார்க்கி நமது ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, 'ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றி. இந்திய சினிமாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். அழகான பாடல்கள் கொடுத்துள்ளார்கள். இது வெறும் பாடல் மட்டுமல்ல. இதனை சினிமா பாடலாக மட்டுமே பார்க்க முடியாது. இதில் காதல், தியாகம், புரட்சி இருக்கிறது; ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இப்பாடலில் உள்ளது. இது எல்லோருக்குமான வெற்றி ஆகும்.