சென்னை : ஈசிஆர் சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று (செப். 11) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வை தனியார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் (event management company) நடத்தியது. ஏற்கனவே கடந்த மாதம் இந்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்து மழை காரணமாக கடைசி நேரத்தில் தேதி மாற்றப்பட்டு செப்டம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (செப். 11) பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பி சென்றனர். அரங்கின் இருக்கை எண்ணிக்கையை விட அதிக அளவில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதால் உள்ளே செல்வோர் செல்ல முடியாமலும், டிக்கெட்டுடன் உள்ளே சென்றவர்களுக்கு இருக்கை இல்லாத நிலையும் ஏற்பட்டது.
இதுவரை நடந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் இது போன்ற மோசமான அனுபவம் கிடைத்ததில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு சென்ற பல பெண்கள் தாங்கள் கூட்டத்தில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
நேற்று (செப். 10) முதல் இந்த விவகாரம் சமூக வலைதலங்களில் பேசு பொருளாகி வரும் நிலையில் நிகழ்ச்சியை நடத்திய தனியார் நிறுவனம் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு மன்னிப்பு கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது x பக்கத்தில் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி டிக்கெட் பெற்று அரங்கினுள் அனுமதிக்கபடாதவர்கள் தங்கள் டிக்கெட் நகல் மற்றும் குறைகளை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும், இது குறித்து தங்களது விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: "மறக்குமா நெஞ்சம்.. இனி எப்படி மறக்கும்..!" காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கடும் வேதனை..!