ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்று கடந்த சில நாட்களாக பரவலாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.
சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது.
1790ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது.
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்? மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா? அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா? இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா?
கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா? தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா?
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்? கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? யார் முதலில் வந்தார்கள்? எது முதலில் வந்தது? என்பதை வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?
காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு - வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது, அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா?
சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?