சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம், லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போதே அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி என்பதாலும், விக்ரம் மெகா ஹிட்டிற்குப் பிறகு லோகேஷ் இயக்கும் திரைப்படம் என்பதாலும் லியோ படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு எகிறியது. மேலும், இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் LCU யுனிவர்சில் இணையுமா என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். படம் குறித்து சஸ்பென்ஸ் காத்து வரும் இயக்குநர் லோகேஷ், படத்தின் அப்டேட்டை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.
இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பிறந்தநாளுக்கு ஆரம்பம் முதல் ஸ்பெஷல் வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோருக்கு கதாபாத்திர வீடியோ வெளியான நிலையில், விஜய் பிறந்தநாளுக்கு லியோ படத்தின் முதல் சிங்கிள் ‘Naa Ready' பாடலை படக்குழு வெளியிட்டது.