சென்னை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு அட்லி இயக்கியுள்ள இத்திரைப்படம், அட்லி இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வெளியாகியுள்ளது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க அட்லி வழிவகை செய்துள்ளார். இந்த நிலையில் இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் உடன் படம் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது, “இது ஒரு பெருமைமிகு தருணம். எனக்கு மட்டுமல்ல அட்லீக்கும் இந்த நாள் பெருமையான நாள். தமிழ்நாட்டிலிருந்து சென்று பாலிவுட்டில் அதுவும் முதல் படமே ஷாருக்கான் படத்திற்கு இசை அமைத்துள்ளேன். இது வட இந்தியாவில் எங்கோ ஒரு திரையரங்கில் படம் பார்ப்பது போல் உள்ளது. அந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு நன்றாக உள்ளது.
சென்னையில் இதுபோன்ற வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்து வருகிறது ரசிகர்களுக்கு நன்றி. தமிழ்ப் படங்கள் பான் இந்தியா லெவலில் வெற்றி பெற்று வருகிறது. தற்போதைய சூழலில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இப்போது மொழி தடையில்லை. ஒரு இசையமைப்பாளராக எனக்கு இது ஒரு பொற்காலம் என்று சொல்வேன்.
விக்ரம், ஜெயிலர் வரிசையில் இப்போது ஜவான் வெற்றி பெற்றுள்ளது. மற்ற மொழிகளில் இசை அமைப்பது சற்று வித்தியாசமானது. அந்த மாநில கலாச்சாரம் மற்றும் பயிற்சியும் தேவை என்றவர், எனக்கு முன் இருந்த பெரிய நடிகர்களைப் பார்த்து அவர்கள் எத்தனை உயரம் சென்றாலும் அவர்களின் தன்னடக்கத்தைப் பார்த்து நானும் பயணிக்கிறேன். இந்த படம் எனது திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜெயிலர் படத்திற்காக எனக்குத் தயாரிப்பாளர் கார் கொடுத்தது பெருமையாக உள்ளது. வழக்கமாக இயக்குநர் மற்றும் நடிகருக்குத் தான் பரிசளிப்பார்கள். எனக்குக் கொடுத்தது மகிழ்ச்சி. இதனை ஒரு பொக்கிஷமாக வைத்துக் கொள்வேன். லியோ குறித்த அடுத்த பாடல் அப்டேட் இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும். எனக்கும் அட்லீக்கும் இந்தி தெரியாது, இப்போதுதான் புரிந்து கொள்கிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கோலிவுட்டில் இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள படங்களின் பட்டியல்!