சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜயுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாகிறது.
மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் விஜய் கூட்டணி என்பதால் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU யுனிவர்சில் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் லியோ படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு லியோ படத்தின் முதல் சிங்கிள் நா ரெடி பாடல் வெளியானது.
அப்பாடலில் சில வரிகளில் மதுவை ஆதரிப்பது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து பாடலில் குறிப்பிட்ட வரிகள் நீக்கப்பட்டது. பின்னர் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரது பிறந்தநாளுக்கு அவர்களது கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டனர். விஜய் ரசிகர்களால் லியோ இசை வெளியிட்டு விழா பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.