சென்னை:செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக விஜய்யின் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடலை படக்குழு வெளியிட்டது. லியோ இசை வெளியீட்டு விழா டிக்கெட் தேவை அதிகரித்ததால் ரத்து செய்யப்பட்டது. அதனால் லியோ இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் குட்டி கதையைக் கேட்கக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து படத்தின் 2ஆம் பாடலான 'Badass' பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த டிரைலர் குறித்த அறிவிப்பு துவண்டு போன ரசிகர்களை உற்சாகமூட்டியது.
லியோ டிரைலர் நாளை வெளியாக இருக்கும் சூழலில், படத்தின் சென்சார் குறித்த தகவலைப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தது. லியோ படத்திலும் வன்முறை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தனது X பக்கத்தில் உள்ள புரொபைலில் லியோ படத்தின் பெயரை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் தனது புரொபைலில் லியோ படத்தின் பெயரை இணைத்துள்ளார். நாளை டிரைலர் வெளியாக உள்ள நிலையில் அதனைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். மேலும் லியோ டிரைலர் திரையரங்குகளில் கொண்டாட அந்தந்த பகுதி காவல் நிலையத்தை அணுக வேண்டும் எனச் சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது
இதையும் படிங்க: பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது தலைவர் 170.. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரஜினிகாந்த்!