'நா ரெடி' பாட்டில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு! சென்னை: நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் தயாரித்துள்ளனர்.
மாஸ்டர் படத்துக்குப் பின் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். 2,000 நடனக் கலைஞர்களைக் கொண்டு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடலில் புகைபிடித்தல், மது குடித்தல், போதைப் பொருள் சம்பந்தமான வரிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் விஜய் புகைபிடிப்பது போன்று காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதனால் 'நா ரெடி' பாடலுக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்துள்ளது. மேலும் விஜய் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. ஏற்கனவே பலமுறை விஜய் படங்களுக்கு இதுபோன்ற எதிர்ப்பு வந்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி, 2018இல் வெளியான சர்கார் ஆகிய படங்களில் போஸ்டர்களில் விஜய் புகைபிடித்தவாறு இருக்கும் அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இத்தகைய புகைபிடிக்கும் காட்சிகளில் விஜய் நடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் விஜய் தனது படங்களில் தொடர்ந்து இதுபோன்ற புகை பிடிக்கும் காட்சிகளை வைத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த சூழலில், பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் விதமாக படக்குழு வித்தியாசமான யுக்தியைக் கையாண்டுள்ளது. பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வரும் நேரத்தில் 'புகைப்பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும். உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகத்தைப் படக்குழு இணைத்துள்ளது. ஆனால் போதைப் பொருள் மற்றும் மது குடிக்கும் காட்சிகளுக்கு எந்தவித வாசகமும் போடவில்லை. இதுவும் தற்போது அடுத்த பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் பாடலில் இடம் பெற்றுள்ள இந்த மாற்றமும் வரவேற்கதக்க ஒன்று என்று சமூக வலைதளங்களில் லியோ படக்குழுவுக்கு ஆதரவு கருத்துகள் பரவி வருகின்றன. படம் வெளியான பின்னர் பாடலின் வரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்குமா அல்லது அப்படியே இடம் பெற்றிருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பாடல் வரிகள் மாற்றப்படவில்லை என்றால் மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது?... தேதியை அறிவித்த படக்குழு..!