லூதியானா:பிரபல பஞ்சாபி பாடகர் சுரிந்தர் ஷிந்தா (64) உடல்நலக்குறைவால் இன்று (26.07.2023) காலமானார். "புட் ஜட்டன் தே", "ஜட் தியோனா மோர்" மற்றும் "ட்ரக் பல்லியா" ஆகிய வெற்றி பாடல்களைப் பாடிய இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தயானந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
பஞ்சாபி மொழி பாடகர்களில் மிகவும் பிரபலமான இவர் ஏராளமான வெற்றி பாடல்களைக் கொடுத்துள்ளார். "புட் ஜட்டன் தே", "உச்சா தர் பாபே நானக் டா" மற்றும் "பட்லா ஜடி டா" போன்ற பல படங்களில் தனது குரலைப் பதிவு செய்த சுரிந்தர் ஷிந்தா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைத் திரட்டி வைத்திருந்தார். அவரின் இழப்பு பஞ்சாபி மொழி திரைத்துறைக்கும், அம்மாநில மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏராளமான திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், “பிரபல பாடகர் சுரிந்தர் ஷிந்தாவின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையுற்றதாகவும், பஞ்சாபின் குரல் முற்றிலும் மவுனமாகிவிட்டது" எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் கவுண்டமணி!