சென்னை:நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் நடித்த '3' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒய் திஸ் கொலவெறி' (Why This Kolaveri) என்ற பாடல் உலகம் முழுவதும் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார். ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கினார். தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் .
லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘லால் சலாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘விஷ்ணு விஷால்’, ‘விக்ராந்த்’ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது இந்தியில் வெளியான ‘கை போ சே’ என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ‘லால் சலாம்’ படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ரஜினி, மொய்தீன் பாய் என்ற வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதை என்பதால் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடித்துள்ளனர். இருவருமே நன்றாக கிரிக்கெட் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ‘லால் சலாம்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ’லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்குச் சுந்தர் சி இயக்கியுள்ள ‘அரண்மனை 4’ திரைக்கு வர உள்ள நிலையில் ‘லால் சலாம்’ படமும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:Leo Movie: பதானை மிஞ்சிய லியோ.. வெளிநாடுகளில் தெறிக்கவிடும் டிக்கெட் விற்பனை.! வரலாற்று சாதனை!