சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தை இயக்கியதன் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். 3 திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, கௌதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' என்ற படத்தையும், 'சினிமா வீரன்' என்ற ஆவணப்படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். இவர் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லால் சலாம் திரைப்படம் இந்தியில் வெளியான 'கை போ சே' என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க:விஜயகாந்த் நினைவிடத்தில் சிவராஜ்குமார் அஞ்சலி!
இப்படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் லால் சலாம் திரைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ், கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கபில்தேவ் இன்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் லால் சலாம் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரம்மாண்டமான 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்..!