சென்னை: MIK Productions Private Limited தயாரிப்பில், விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் 'குலசாமி'. இப்படம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது,"இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள், எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி. அமீர் அண்ணன், அவருடைய படங்களைத் தாண்டி மிகப்பெரிய அன்புள்ள மனிதர். அவர் எனக்காக வந்துள்ளார்.
சுரேஷ் காமாட்சியும், நானும் ஒன்றாக சுற்றியவர்கள். இப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகியுள்ளார். அவருக்கும் நன்றி. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிகச்சிறப்பான வசனங்கள் தந்துள்ளார். அவரால் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய போராட்டங்களைத் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி" எனக் கூறினார்.
இசையமைப்பாளர் மஹாலிங்கம் பேசியதாவது, "தயாரிப்பாளரும், நானும் ஒரே ஊர்க்காரர்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் என் கிராமத்து இசையை ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதில் எனக்கு பிடித்ததை செய்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்து இந்தப் படத்திற்கு இசை அமையுங்கள் என்றார், தயாரிப்பாளர். இந்த களம் பெரிது, புதிது என்பதால் தயங்கினேன். ஆனால், படக்குழு தைரியம் தந்தார்கள். இயக்குநர் எனக்கு ஊக்கம் தந்தார். நாங்கள் புது டீம். நீங்கள் தான் எங்களுக்கு ஆதரவு தந்து எங்கள் படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும், நன்றி" எனக் கூறினார்.
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவி பேசியதாவது, "என்னுடைய கேரியரை பிரஸ் போட்டோகிராஃபராக தான் ஆரம்பித்தேன். பி.சி.ஸ்ரீராம் சாரிடம் தான் கேமரா கற்றுக்கொண்டேன். சரவண சக்தி கதை சொன்னபோதே இந்த படம் பெரிய வகையில் வரும் என்று தெரிந்தது. சரவண சக்தி மிகச்சிறந்த வகையில் இயக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்" எனக் கூறினார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது, "நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். நான் காசில்லாமல் வேலைக்காக வெளிநாடு சென்றபோதே, அவர் சினிமாவில் முயற்சி செய்துகொண்டிருந்தார். நான் இங்கு வந்த பிறகும் அவர் அதே முயற்சியில் விடாப்பிடியாக இருந்தார்.
நல்ல திறமைசாலி. பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால், அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" எனக் கூறினார்.
தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது, "இந்த படத்தின் இயக்குநர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும். ஆனால், அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன். அதைப் பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன். சுரேஷ் காமாட்சியும், இயக்குநரும் பழைய ஆட்கள், 20 வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
அது அவரது முதல் படம். எனக்கு உதவி இயக்குநராக முதல் படம், சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர். அதன் பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர். நான் இதற்கு ஒத்துப்போகவில்லை, 10 வருடம் ஆனாலும் பரவாயில்லை. நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன்.