சென்னை: செய்தித்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அருள்செழியன், தற்போது முதல் முறையாக குய்கோ என்ற படத்தை இயக்கி இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கமே ’குய்கோ’ என இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விதார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் வெளிநாட்டில் வேலை செய்பவரான யோகி பாபு நடித்துள்ளார். அவரது அம்மா இறந்து விட இறுதி காரியங்கள் செய்ய மகன் வர வேண்டும். அவர் வரும் வரை பிரீஸர் பாக்ஸ்-இல் அம்மாவின் உடல் வைக்கப்படுகிறது. நாயகன் வந்து அம்மாவிற்கு இறுதிச் சடங்குகளை முடிக்கிறார். அம்மா வைக்கப்பட்டு இருந்த பிரீஸர் பாக்ஸை குடியிருந்த கோயிலாக நினைத்து வழிபடுகிறார் நாயகன்.
இந்த கதையை அழகான பொழுதுபோக்கு மற்றும் அரசியல் நையாண்டி உடன் இயக்குநர் அருள்செழியன் இயக்கியுள்ளார். பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் பாராட்டும் பெற்ற இப்படம், போதிய விளம்பரங்கள் இல்லாததால் திரையரங்குகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.