சென்னை: ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து VISION CINEMA HOUSE நிறுவன தயாரிப்பாளர் டி.அருளானந்து தயாரிக்கும் "கோழிப்பண்ணை செல்லதுரை" திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை சீனு ராமசாமி இயக்கி வருகிறார்.
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றிப் படங்கள் மற்றும் பல்வேறு விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது படங்கள் எப்போதும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இருக்கும். விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய மாமனிதன் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பு பெற்றதுடன் பல்வேறு திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது.
தற்போது சீனு ராமசாமி எழுதி இயக்கும் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படமும் கிராமத்து மண் சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைவரும் ரசிக்கும் வகையில் அதிரடி உணர்ச்சிகள் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்து உள்ளார். ஏகன் என்ற புதுமுக நடிகர் கதநாயகனாக நடித்துள்ளார். மேலும் பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஶ்ரீராம் (அறிமுகம்), சத்யா (அறிமுகம்), மானஸ்வி, பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். கோழிப்பண்ணை செல்லதுரை N.R. ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது.
இதையும் படிங்க: சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த படம் அயோத்தி, சிறந்த நடிகராக வடிவேலு தேர்வு!