சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை பெற்றுள்ளது.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை, திரையில் பார்வையாளர்கள் மனதிற்கு நெருக்கமான முறையில் அழகாக காட்சிபடுத்துவதில் திறமைமிக்கவராக இயக்குநர் சீனு ராமசாமி அறியப்படுகிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அழகான காதலைச் சொன்னவர், அதில் அம்மா பாசத்தையும் அழகான திரைக்கதையால் ரசிக்க வைத்தார். நீர்ப்பறவை படத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவனின் வாழ்க்கையை இலங்கை பிரச்சினையுடன் இணைத்து சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. மாமனிதன் படமும் தோற்றுப் போன ஒருவரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை படம்பிடித்து காட்டியது. இப்படி எளிய மனிதர்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுவதில் சீனு ராமசாமி கைதேர்ந்தவர் என சிலாகிக்கப்படுகிறார்.