Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது
இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களை பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.
பின்னர் பேசிய நடிகை கோவை சரளா, "இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றி" என கூறினார்.
பின்னர் பேசிய நாஞ்சில் சம்பத், "இந்தப்படம் ஒரு இயற்கை நாட்டியம், இந்தப்படத்தில் எதிர்க்கட்சிக்காரனாக ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார் பிரபு சாலமன், அதுவே தான் எனது விருப்பமும். நான் நன்றாக நடித்ததாக கோவை சரளா சொன்னார். அவரை வாழும் மனோரமா என்றார்கள். அவர் ஆளும் மனோரமா. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்" என கூறினார்.
பழ கருப்பையா பேசும்போது,"ஒரு நாள் போன் செய்து இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். நடிக்க வையுங்கள் நான் நடிக்கிறேன் என்றேன். ஒரு காட்சிக்கு ஒரே வசனத்தை பல வடிவங்களில் சொல்லி நடிக்க வைப்பார். அது சரியான வடிவம் பெறும் வரை விட மாட்டார். மிகச்சிறந்த இயக்குநர். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி" என கூறினார்.
இவ்விழாவில் பேசிய கே.பாக்யராஜ், "கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம். அந்தப்படத்தில் அவரது திறமையை பிரமித்து பார்த்திருக்கிறேன். அதே போல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்கு தெரியும்.
முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம்பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள் அது உண்மையான கருத்து. இந்தப்படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர். கும்கி படத்தில் அவரை பார்த்து பிரமித்தேன். இந்தப்படம் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்" என கூறினார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், "Trident Arts R ரவீந்திரன் தயாரிப்பில் முந்தைய படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அது போல் இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். உங்களுக்கு கமல் சப்போர்ட் இருக்கிறது. அவரால் நானே தெனாலி படத்தில் தயாரிப்பாளராக மாறினேன். கோவை சரளாவை நாயகியாக்கினார். அது போல் அவர் சப்போர்ட் இருக்கும் போது எளிதாக ஜெயிக்கலாம். இந்தப்படமும் ஜெயிக்கும், வாழ்த்துகள்" என கூறினார்.
நடிகர் அஷ்வின் பேசும் போது "படம் பண்ணுவதே எனக்கு பாக்கியம். ரவி சார் எனக்கு முதல் படம் கொடுத்ததோடு இரண்டாவது படமும் கொடுத்தார். பிரபு சாலமன் படம் என்றவுடனே நான் எதுவுமே கேட்கவில்லை. நான் ஓகேவா என கேட்டேன், அவர் எனக்கு செய்ததை திரையில் நீங்கள் பார்ப்பீர்கள். கமல் பக்கத்தில் நிற்பதே பெருமை. அவர் வந்து வாழ்த்தியது மிகப்பெரிய பெருமை. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி" என கூறினார்.