இயக்குநர் ராஜ செல்வம் இயக்கியுள்ள 'கொடை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிங்கமுத்துவின் மகனும் இப்படத்தின் நாயகனுமான கார்த்திக் சிங்கா, நாயகி அன்யா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், இயக்குநர் எழில், அம்மா டி.சிவா, தயாரிப்பாளர் கே.ராஜன், ராதாரவி, சிங்கமுத்து, இசை அமைப்பாளர் சுபாஷ் கவி, அஜய் ரத்னம், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய நடிகர் ராதாரவி, “தற்போது தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது. நான் ஓடிடிக்கு எதிரானவன் இல்லை. உண்மையை சொல்கிறேன். அரசியலிலும் வாரிசு வேண்டும். தமிழ் நாயகர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பழைய வரலாறுகளைப் பற்றி பேசுவதில் ஒரு பயனும் இல்லை. இன்றைய நிலையை யோசித்துப்பாருங்கள்” எனப் பேசினார்.
மேலும் ’கொடை’ படத்தின் நாயகனான நடிகர் கார்த்திக் சிங்கா பேசுகையில், “இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம்மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது.
இந்தப் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லா வித அம்சங்களும் இருக்கிறது. படம் மிக நன்றாக வந்துள்ளது. நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்தில் எனக்கு சிறிய ரோல் என்றாலும், அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை வசனங்கள் வாயிலாகவும், நடிப்பு வாயிலாகவும் மெருகேற்ற படக்குழு நிறைய உதவி செய்தனர்.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அதில் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் நான் நடித்துள்ளேன். படத்தின் நாயகன் கார்த்திக் மிகப்பெரிய நாயகனாக மாற வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. எல்லோருக்கும் நன்றி” எனப் பேசினார்.