ஹைதராபாத்: நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, 2016ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் மற்றும் ரெமோ படத்தில் நாயகியாக நடித்தார். அதே ஆண்டு நடிகர் தனுஷ் உடன் இணைந்து 'தொடரி' படத்தில் நடித்தார். இப்படங்களில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
அதன் பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு இவர் நடித்த 'நடிகையர் திலகம்' படம் வெளியானது. அதில், பழம்பெரும் நடிகை சாவித்ரியைப் போலவே தத்ரூபமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படம் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக மாறியது. இப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இப்படத்திற்கு பிறகு, நடிகர் விஜயுடன் பைரவா, நடிகர் விக்ரமுடன் சாமி2, நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார். ஆனால், அது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
தெலுங்கில் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பிறகு, மாரிசெல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார். அதில், நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.