இயக்குநர் முத்தையா மண்வாசனையுடைய படங்களை இயக்குவதின் மூலம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்தவர். இவரது குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் உள்ளிட்ட படங்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. இவர் கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை கடைசியாக இயக்கினார். இப்படமும் இதற்கு முன் கார்த்தியுடன் இணைந்த கொம்பன் படத்தை போல மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் தற்போது ஆர்யாவை தனது கதையின்நாயகனாக்கி உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா முதல் முறையாக கிராமத்துப் பின்னணியில் நடித்துள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். ஆர்யாவையும் தனது படங்களில் வரும் கதாநாயகன் போல கருப்பு வேட்டிகட்டிவிட்டுள்ளார், இயக்குநர் முத்தையா.
இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார், ஆர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார்.