சென்னை: தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியாற்றப் போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும் கைவசம் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து வருகிறார். தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் இருக்கும் என்று தெரிவித்தார். இதனிடையே இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் உதயநிதி உடன் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த வாரம் வெள்ளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து உதயநிதி கூறுகையில், "கண்ணை நம்பாதே திரைப்படம் உருவான விதம். ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவாலான ஒன்று. எதிர்பாராத பல சவால்களுக்கு மத்தியில் இதை படமாக்கி உள்ளோம்.
அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைப் பார்த்தப் பிறகு மு. மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று அவரை சந்தித்தேன். முதலில் அவர் என்னிடம் ஒரு எமோஷனலான காதல் கதையை சொன்னார். ஆனால், நான் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஏனென்றால் வெவ்வேறு ஜானர்களில் படங்கள் நடிக்க விரும்பியதால் தான் இப்படி கூறினேன்.
ஆனால், அவருடைய முதல் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதைப் போன்றே ஒரு க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லருடன் நிமிடத்திற்கு நிமிடம் ஆச்சரியமும் ட்விட்ஸ்ட்டும் இருக்கும்படியான கதையை உருவாக்க அவருக்கு வேண்டுகோள் வைத்தேன். அதன் பிறகு ‘கண்ணை நம்பாதே’ படத்தின் கதையை சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது.