டெல்லி: ‘பவித்ரா ரிஷ்தா’ மற்றும் ‘தியா அவுத் பாத்தி ஹம்’ ஆகிய ஹிந்தி தொலைகாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை கனிஷ்கா சோனி, தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்னர், கனிஷ்கா சோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி அணிந்திருந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட அவரது ரசிகர்கள், சீரியல் ஷூட்டிங்கா... அல்லது திருமணம் ஆகிவிட்டதா...? போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என்னை நானே திருமணம் செய்துகொண்டேன். நான் காதலிக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். எனது கேள்விகளுக்கான பதில், என்னிடமே உள்ளது. எனக்கென்று ஒரு ஆண் தேவையில்லை. நான் தனியாக எனது கிட்டாருடன் (இசைக்கருவி) இருக்கும் போதே மகிழ்ச்சியாகதான் இருக்கின்றேன். சிவன், சக்தி இரண்டும் என்னுள் இருக்கிறது. நான் வலிமை வாய்ந்தவள். அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.