சென்னை: இயக்குநர் எச்.வினோத் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் சமூகத்தில் நடக்கும் பல்வேறு மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சதுரங்க வேட்டை எச்.வினோத்துக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
அதன்பிறகு கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார். தமிழ்நாட்டை உலுக்கிய பவாரியா கொள்ளையர்களை பற்றி எடுக்கப்பட்ட அப்படம் இன்றைய வரையிலும் சிறந்த போலீஸ் கதையாக ரசிக்கப்பட்டு வருகிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருந்தாலும் சிறந்த திரைக்கதை மூலம் வெற்றிப் படமாக மாற்றினார். அதன் பிறகு அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். இந்தியில் அமிதாப் பச்சன் நடத்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை. அதன்பிறகு அஜித்தை வைத்து வலிமை, துணிவு என இரண்டு படங்களை இயக்கினார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து எச்.வினோத்திற்கு கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். KH233 என அழைக்கப்பட்ட படத்தின் ப்ரோபோ வீடியோவும் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் கமல்ஹாசன் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, மற்றும் பிரபாஸ் நடிக்கும் கல்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த படத்தின் திரைக்கதையில் கமலுக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது.