சென்னை: இந்திய சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர், நடிகர் ரஜினிகாந்த். இன்று ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை ஒட்டி பல்வேறு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வரும் ரஜினிகாந்த், தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கும் போட்டியாக உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
மேலும் தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நடிகை வரலட்சுமி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “அருமை நண்பர் சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும், என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டு உள்ளார்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “தங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு மின்னூட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். அதை மிக்க விலை கொடுத்துத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜ வாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது.
எதையும் மறைத்ததில்லை என்னிடம் நீங்கள் பலம், பலவீனம், பணம், பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். உடல், மனம், வயது கருதி நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கும், ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கையெல்லாம் வழிவகுக்கும், வாழ்த்துகிறேன். விரும்பும் வரை வாழ்க” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:“ரஜினி கட்சி தொடங்கி, தனித்து போட்டியிட வேண்டும் என வீரப்பன் விரும்பினார்” - நக்கீரன் கோபால்