சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது 233வது படத்தில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.
கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து கமல்ஹாசன் திரை வாழ்வில் மிகப்பெரும் சாதனையை படைத்தது. இதனையடுத்து கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசன் படத்தை இயக்கப்போவதில் பல இளம் இயக்குநர் பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பது உறுதியானது. இதனை ப்ரோமோ வீடியோவுடன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.
KH233 என தற்போது அழைக்கப்படும் இந்த திரைப்படம் விவசாயம் சார்ந்த அரசியல் கதை என கூறப்படுகிறது. இயக்குநர் எச்.வினோத் சதுகரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
எச்.வினோத் உண்மை சம்பவங்களை தத்ரூபமாக படமாக்குவதில் கைதேர்ந்தவர். அவருடன் கமல்ஹாசன் இணைந்துள்ள திரைப்படம் கண்டிப்பாக வித்தியாசமான படைப்பாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசன் எச்.வினோத் திரைப்படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பயிற்சி வீடியோவை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ’guts & guns' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் பயன்படுத்தியது போன்ற துப்பாக்கியை வைத்து பயிற்சி செய்து வருகிறார். கமல்ஹாசனின் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் கமல்ஹாசன் தனது 234வது படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Jawan : ஜவான் எப்படி இருக்கு? நான்கு ஆண்டுகளுக்கு பின் சம்பவம் செய்யும் அட்லி.. ரசிகர்கள் கொண்டாட்டம்!