சென்னை:இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியுள்ள பிகினிங் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லிங்குசாமி, “முதல் படம் நான் இயக்கும்போது என்ன மனநிலை இருந்ததோ, அதே மனநிலையை இப்போது நான் பார்க்கிறேன்.
உங்களுடைய (இயக்குநர் ஜெகன் விஜயா) எழுத்து அற்புதமாக உள்ளது. அவ்வளவு சீக்கிரம் சினிமாவை விட்டு போய்விட மாட்டீர்கள். இந்த படத்திற்கு பிறகு திருப்பதி பிரதர்ஸ் மஞ்சப்பை, கோலிசோடா, வழக்கு என் 18/9 போன்ற நல்ல படங்களை தயாரிக்க உள்ளது.
பொருளாதார ரீதியாக உத்தம வில்லன் பெரிய பின்னடைவுதான். சமீபத்தில் கமலை சந்தித்து பேசினேன். அப்போது அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு கமல் ஹாசன் மீண்டும் ஒரு படம் செய்வதாக உறுதி அளித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என நம்புகிறோம்” என்றார்.
இதனையடுத்து பேசிய இயக்குனர் ஜெகன், “நான் ஹலோ ஹலோ என்ற வார்த்தையில் இருந்து தொடங்குகிறேன். காரணம் எனது அப்பா சவுண்ட் சர்விஸ் வைத்திருந்தார். சிறு வயதில் இருந்து அந்த மைக்கில் பேச ஆசைப்பட்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. இப்போது இந்த மைக் முன்பு நான் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.
2006 முதல் நான் உதவி இயக்குனராக சென்னையில் ஏறி இறங்காத அலுவலகம் இல்லை. அப்படியும் பெயர் சொல்லும் அளவிற்கு படங்களில் நான் பணியாற்றவில்லை. கடைசியாக 2012ஆம் ஆண்டு ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அநேக அலுவலகங்களில் என்னை அன்பிட் என்றே முடிவு செய்தனர்.