சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஊழல், லஞ்ச ஒழிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து 1996இல் உருவாக்கப்பட்ட திரைப்படம் 'இந்தியன்'. இந்த படத்தில் கமல் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கியிருப்பார். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ஊழல் மற்றும் லஞ்சத்தால் தனது மகளை இழக்கும் சேனாதிபதி, ஒரு கட்டத்தில் லஞ்சம் வாங்கும் தனது மகனையே கொல்ல துணிவார். இயக்குநர் ஷங்கரின் விறுவிறுப்பான காட்சியமைப்பால் இந்தியன் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அனிருத் இசையமைத்துள்ள இரண்டாம் பாகத்தில் கமலுடன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது முதலே பல தடங்கல்களைச் சந்தித்து வந்தது. கரோனா தொற்று, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து தொழில்நுட்ப கலைஞர் உயிரிழப்பு என பலமுறை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.