சென்னை:ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' (Kasedhan Kadavulada) படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (மார்ச்.22) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் மிர்ச்சி சிவா, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தை ஈ5 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜெயகிருஷ்ணன் வெளியிடுகிறார்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், 'இன்றைக்கு மக்களின் மனம் எப்படி இருக்கும் என்று புரியவே இல்லை. எந்த படத்தை ஏற்றுக்கொள்வார்கள். எந்தப் படத்தை ஒதுக்கித்தள்ளுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கடந்த 6 மாதங்களாக மக்கள் ஒன்றை சொல்கின்றனர். நல்ல படத்தை ஏற்று கொள்கிறார்கள். அதற்கு உதாரணம் தான், 'லவ் டுடே' (Love Today). இந்த லவ் டுடே படத்தை மாணவர்கள், இளைஞர்கள் என எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.
பல பேர் ஆடியோ நிகழ்ச்சி வந்தால் மரியாதை குறைந்து விடும் என நினைக்கின்றனர். தயாரிப்பாளரை மதிக்க தெரிய வேண்டும். இயக்குநரை வணங்கத்தெரிய வேண்டும்; எல்லாமே இயக்குநர் தான். இயக்குநர் இல்லாமல் யாரும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு நன்றி.
கதை தான் முக்கியம். பிறகு தான் ஹீரோ. நாயை போட்டு கூட படத்தை ஓட்டிவிடலாம். ராமநாராயணன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 28 நாளில் படம் எடுத்து 100 நாட்கள் ஓடிய படம் 78. மிகப்பெரிய சாதனைப் படைத்தவர் ராம நாராயணன். கதையைத் திட்டமிட்டு பண்ணுங்க. ஹீரோவுக்கு கதை பண்ண வேண்டாம். ஹீரோவுக்காக கதை எழுதினால் கண்டிப்பாக தோல்வி தான்.
கதைக்கு ஏற்ப ஹீரோவை போடுங்க. ஹாக்கியை மையமாக வைத்து உருவாகிய படம் 'சக் தே இந்தியா'. ஷாருக் கான் தான் ஹீரோ. கதை மட்டும் தான் படம். அதே படம் தான் பிகில். அது ஹாக்கி, இது கால்பந்து. தயாரிப்பாளரை எட்டி எட்டி உதைத்தார்கள்.