சென்னை: 'ஜீவி' படப்புகழ் வெற்றி, 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ஈரப்பதம் காற்று மழை' என்ற புதிய படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு ஸ்ரீராம் வெங்கடேஷ் இசையமைத்திருக்க, அமல் டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பாளராகவும், அந்தோணி மரியா கெரி எல் கலை இயக்குநராகவும், நூர் முகமது ஸ்டண்ட் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா கூறும்போது, “ஈரப்பதம் காற்று மழை திரைப்படம், மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம். வழக்கமான கதை சொல்லும் முறை இந்தப் படத்தில் இருக்காது. இப்படம், மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சி விலகல்கள் ஆகியவற்றில், இந்த கதை கவனம் செலுத்துகிறது. இதன் பொருட்டு வரும் நிகழ்வுகள், படத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
மேலும், வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும், அதேநேரம் எப்படி கனிவாகவும் இருக்கிறது என்ற வாழ்வின் நிலையற்ற தன்மையை இந்த படம் உணர்த்தும். முற்றிலும் நல்லவர் என்றோ, முற்றிலும் தீயவர் என்றோ மனிதர் யாரும் இல்லை. அது தனி நபரின் உணர்வைப் பற்றியது என்ற எண்ணத்தையும், அவர்கள் ஒருவரையொருவர் எப்படி எதிர்கொள்கிறார்கள் மற்றும் அதன் விளைவுகளைப் பொறுத்ததே வாழ்க்கை என்பதை இந்தப் படம் நமக்குச் சொல்கிறது.
படத்தின் ஒவ்வொரு விவரமும் தனிக் கவனத்துடன் படமாக்கப்பட்டு உள்ளது. சென்னையின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இந்த கதை நடைபெறுவதால், முடிந்த அளவுக்கு லைவ் லொக்கேஷனில் அதன் உண்மைத் தன்மையுடன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.