சென்னை:இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். அதற்கு "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பிலும், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பிலும் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதோடு, திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில அங்கு பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதில், படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், "படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப் பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார்.