சென்னை: தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் பாகம் 2, அகிலன் ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. தற்போது பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & ஜி ஜெயராம் வழங்கும், இயக்குநர் ஐ.அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி - நயன்தாரா இருவரும் தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து 'இறைவன்' (iraivan) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 இந்திய மொழிகளில் தயாராகி வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அகமது, இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி ஜெயராம் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றுவதில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவியின் நட்சத்திர மதிப்பு பான் இந்தியா அளவில் உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.
மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுக்கு அனைத்து பகுதிகளிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், மொழிகள் தாண்டி இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி போன்ற திறமையான நடிகர்களை உள்ளடக்கியுள்ளதால், உலகளவில் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகமது இயக்கிய என்றென்றும் புன்னகை திரைப்படம் காமெடி கலாட்டாக்கள் நிறைந்த படமாக இருந்தது.
படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். மேலும் காதல் காட்சிகளும் மிகவும் ரசிக்கப்பட்டது. மனிதன் திரைப்படம் இந்தி படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தமிழிலும் வரவேற்பு பெற்றது. உதயநிதி மற்றும் ஹன்சிகாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். இதனால் அகமது இயக்கியுள்ள இந்த 'இறைவன்' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுக்க படப்பிடிப்பு தளத்தில் குவிந்த வெளிநாட்டு ரசிகர்கள்!