சென்னை:அட்லீ தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என அறியப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் மூலம் இயக்குநரானார். அதன்பிறகு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பல ஹிட் படங்களை கொடுத்தார். தமிழில் தொடர்ச்சியான ஹிட் மூலம் பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து படம் ஜவான் படத்தை இயக்கினார்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சஞ்சய் தத் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்நிலையில், ஜவான் திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 937 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படம் வெளியானது முதல் வசூலை வாரிக் குவித்து வருகிறது. நேற்று மட்டும் இந்திய அளவில் ரூ.8.85 கோடி வசூலித்துள்ளது என்றும், தற்போது வரை இந்திய அளவில் ரூ.526.73 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில தினங்களில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ.543.5 கோடியை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமான பதான் சாதனையை முறியடிக்க உள்ளது. மேலும், சன்னி தியோலின் கத்தர் 2 படத்தின் இந்த ஆண்டு வசூலான ரூ.521 கோடியை கடந்து ஜவான் திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
அது மட்டுமின்றி தமிழ், தெலுங்கை விட இந்தி பதிப்பு வசூலில் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஜவான் திரைப்படம் அதிவேகமாக ரூ.100, 200, 300, 400, 500 கோடியை வசூல் செய்த படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. மேலும், இன்னும் சில தினங்களில் ஜவான் திரைப்படம் ரூ.1,000 கோடி வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இது பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜவான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படத்தின் வசூல் மூலம் இயக்குநர் அட்லீ தன்னை விமர்சித்த அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:Actress Trisha : திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா!