சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான திரைப்படம், ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சஞ்சய் தத் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
படம் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஜவான் படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 53.23 கோடியும், மூன்றாவது நாளில் 77.83 கோடியும் வசூல் செய்தது. நான்காவது நாளில் 80 கோடி வசூல் செய்து ஒரே நாளில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.