மும்பை: ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஜவான். அனிருத் இசையமைத்து உள்ள ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. ஜவான் திரைப்படம் சமூகத்தில் நடக்கும் தவறுகளை சரி செய்ய துடிக்கும் மனிதனின் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையக் கதையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் விக்ரம் ரத்தோர் மற்றும் அசாத் என இரட்டை வேடத்தில் தந்தை, மகன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவே காணப்படுகிறது. தென் இந்தியாவில் கலவையான விமர்சனங்களை ஜவான் திரைப்படம் பெற்றிருந்தாலும், வட இந்தியாவில் ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஜவான் படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜவான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்ட்மெண்ட் தனது X பக்கத்தில் "ஜவான் திரைப்படம் உலக அளவில் 1103.27 கோடி வசூல் செய்துள்ளதாக" பதிவிட்டு உள்ளது.
மேலும் அந்த பதிவில் "ஜவான் திரைப்படம் ஒவ்வொரு நாளும் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது உலக அளவில் 1100 கோடி வசூல் செய்த முதல் பாலிவுட் படம் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது" என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் ஜவான் திரைப்படம் இந்திய அளவிலான பாக்ஸ் ஆபிசில் இதுவரை 733.37 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது.
அதேபோல் வெளிநாட்டில் 369.90 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தி மொழியில் மட்டும் ஜவான் திரைப்படம் 560.03 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், டப்பிங் செய்யப்பட்ட மற்ற மொழிகளில் 59.89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும் தயாரிப்பு குழு தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களே வைப் பண்ண ரெடியா?... மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் ஆண்டனி!