சென்னை: இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநராகப் பார்க்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை காப்பியடித்து படம் எடுக்கிறார் என்று இவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தான் எடுக்கின்ற படங்களில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காட்சியை வைத்து ரசிகர்கள் மனதை கவரக்கூடியவர்.
விஜய்யை வைத்து இவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் விஜயின் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றி படங்களாகப் பார்க்கப்படுகின்றன. இப்படி தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய அட்லி, தற்போது பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கானை இயக்கி வருகிறார்.
ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ள இதில் கதாநாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் கடந்த ஆண்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது. மேலும் ஜவான் படத்தை வருகிற ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என்பதால் குறித்த தேதியில் படத்தை வெளியிடுவது முடியாத காரியம் என்கின்றனர்.